தன்னுடைய தர்பாருக்கு விசாரணைக்காக வரும் வழக்குகளில் பலவற்றை அக்பர் பீர்பாலிடம் ஒப்படைப்பதுண்டு. ஒருநாள், அக்பரின் அனுமதியுடன் தர்பாருக்கு வந்த மதுசூதன் என்ற வியாபாரி அவரை வணங்கியபின், “பிரபு! என் பெயர் மதுசூதன்! நான் ஒரு நெய் வியாபாரி! ஒரு மாதத்திற்கு முன் அஸ்லாம்கான் எனும் என் நண்பன் என்னிடம் வந்து 20 முகராக்கள் கடன் கேட்டான். பதினைந்து நாள் களுக்குள் திருப்பித் தருவதாகச் சொன்னவன் இதுவரை அதைத் திருப்பித் தரவேயில்லை” என்றார்.
“நீ கொடுத்த கடனுக்கு அவனிடம் இருந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“அஸ்லாம்கானை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். அதனால் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவில்லை. ஆனால் நான் சொல்வது உண்மை!” என்றார்.
உடனே பீர்பாலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பால்! இந்த வழக்கை நீ கவனிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குச் சம்மதித்த பீர்பால் மாலையில் மதுசூதனைத் தன் வீட்டில் சந்திக்கச் சொன்னார். மாலையில் மதுசூதன் வீட்டிற்கு வந்ததும், அவரை நடந்தவற்றை மீண்டும் விளக்கச் சொன்னார். அவர் சொன்னதெல்லாம் கேட்டபிறகு, “ஆக, நீங்கள் அஸ்லாமுக்குக் கடன் கொடுத்ததற்கு அத்தாட்சி எதுவும் இல்லை. சாட்சிகளும் இல்லை” என்றார் பீர்பால்.
அதற்கு மதுசூதன், “ஆமாம்!” என்றார். அவருக்கு தைரியமளித்து அனுப்பியபின், பீர்பால் அஸ்லாம் கானைத் தன்னை சந்திக்கும்படி தகவல் அனுப்பினார். சற்று நேரத்தில் நல்ல உடை அணிந்த வாட்டசாட்டமான ஓர் ஆள் பீர்பாலைத் தேடி வந்தார். “நான் தான் அஸ்லாம்கான்! என்னை வரச் சொன்னீர்களாமே!” என்றார்.
உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். உங்கள் மீது ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி உங்களை விசாரிக்க வேண்டும்” என்றார் பீர்பால். “என் மீது புகாரா? நான் மிகவும் நாணயமானவன்! என் மீது புகார் வர சிறிதும் வாய்ப்பு இல்லையே!” என்றான் அஸ்லாம்.
மதுசூதன் அவர் மீது தொடுத்து உள்ள வழக்கைப்பற்றி பீர்பால் விவரித்ததும், “நான் ஏன் அவரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும்? எனக்கு ஏராளமாக சொத்து இருக்கிறது. நெய் வியாபாரத்தில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறேன். மதுசூதன் என் மீது வீணாகப் பழி சுமத்துகிறான்” என்றான் அஸ்லாம். “இருக்கலாம்! ஆனால் வழக்கு என்று வந்து விட்டபின் அதை நன்கு விசாரிக்க வேண்டியிருக்கிறது” என்றார் பீர்பால். “அல்லா எனக்கு ஏராளமான செல்வத்தை வழங்கி இருக்கிறார். எனக்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அஸ்லாம் அடித்துக் கூறினார்.
உடனே பேச்சை மாற்றிய பீர்பால், “அஸ்லாம்! உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?” என்றார்.
“சொல்லுங்கள்” என்று அஸ்லாம் கூற, “கிராமத்திலுள்ள என் நண்பனிடம் எனக்கு ஒரு டின் நெய் அனுப்பச் சொன்னேன். அவன் இரண்டு டின் அனுப்பி விட்டான். ஒரு டின் நெய்யை எங்காவது விற்று விட்டால் நல்லது” என்றார் பீர்பால்.
“அதை என்னிடம் கொடுங்கள். அதை விற்றுப் பணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றான் அஸ்லாம்.
“நன்றி! நாளைக்கே உங்கள் கடைக்கு ஒரு டின் அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பீர்பால் அவரை அனுப்பி வைத்தார். மறுநாள், மதுசூதன் வீட்டுக்குச் சென்ற பீர்பால், அஸ்லாம்கானிடம் கூறியதுபோல் கூறிவிட்டு நெய்யை விற்றுத்தரமுடியுமா என்று கேட்டார். மதுசூதனும் அதற்கு ஓப்புக் கொண்டதும், இரண்டு பேர் கடைக்கும் இரண்டு நெய் டின்கள் அனுப்பப்பட்டன.
மறுநாள் பீர்பால் தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில், மதுசூதன் மூச்சிரைக்க ஓடிவந்தார். “பீர்பால்! நீங்கள் அனுப்பியிருந்த டின்னில் ஒரு பொற்காசு இருந்தது. அதைக் கொடுக்க வந்தேன். நெய் விற்ற பணம் இதோ!” என்று அவர் மொத்தத்தையும் பீர்பாலிடம் தந்தார்.
“அட! நான் அனுப்பிய டின்னில் பொற்காசு இருந்ததா? நான் மிகவும் அதிருஷ்டசாலி! நன்றி, மதுசூதன்” என்றார் பீர்பால்.
“அதிருக்கட்டும். என்னுடைய வழக்கு என்ன ஆயிற்று?” என்று மதுசூதன் கேட்க, “அதுவா! நான் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறேன். நாளைக்கு முடிவு தெரியும்” என்றார் பீர்பால்.
அடுத்த நாள் பீர்பால் வீட்டுக்கு வந்த அஸ்லாம் “உங்களுடைய நெய் விற்ற பணம் இதோ!” என்று பணத்தை அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தப்பின் அவரை உட்காரச் சொல்லிவிட்டு பீர்பால் தன் வேலைக்காரனை அழைத்து அவன் செவிகளில் ரகசியமாக ஏதோ கூறினார். அவர் என்ன கூறினார் என்று அஸ்லாமின் செவிகளில் விழவில்லை. அதைப்பற்றி அவன் பொருட்படுத்தவும் இல்லை.
பீர்பால் தன் வேலைக்காரனிடம் ரகசியமாகக் கூறியது இதுதான்! “நேராக நீ அஸ்லாமின் வீட்டுக்குப் போ! அவருடைய மகனைக் கூப்பிடு! அவனுடைய தந்தை பீர்பாலின் வீட்டிலிருப்பதாக கூறு! பிறகு நெய் டின்னில் இருந்த ஒரு பொற்காசை எடுத்துவர மறந்து விட்டதாகவும், அதை உடனடியாக எடுத்து வரவும் அவன் தந்தை கூறியதாகச் சொல்!” என்றார்.
வேலைக்காரனை அஸ்லாமின் வீட்டுக்கு ரகசியமாக அனுப்பியபின், பீர்பால் தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அஸ்லாமிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வேண்டும் என்றே காலத்தைக் கடத்தினார்.
சற்று நேரத்தில் அஸ்லாமின் மகனுடன் பீர்பாலின் வேலைக்காரன் திரும்பினான். அந்தச் சிறுவன் அஸ்லாமை நோக்கி ஓடிவந்து, “அப்பா! நீங்கள் எடுத்துவரச் சொன்ன பொற்காசு இதோ! இது நமக்கு நேற்று நெய் டின்னில் கிடைத்தது” என்று உண்மையை உளறிவிட, அஸ்லாம் கோபத்துடன் “அதிகப்பிரசங்கி! உன்னை யார் இங்கே வரச்சொன்னது? நெய் டின்னில் பொற்காசா? நீ என்ன மடத்தனமாய் உளறுகிறாய்?” என்று உண்மையை மறைக்க அரும்பாடு பட்டார்.
“அவனை ஏன் மிரட்டுகிறீர்கள் அஸ்லாம்? பையன் உண்மையைத் தான் கூறுகிறான். நீங்கள்தான் மூடி மறைக்கிறீர்கள். இந்தப் பொற்காசை நான்தான் நெய் டின்னில் வைத்தேன். உங்களை சோதிப்பதற்காகத்தான் அதைச் செய்தேன். இனியும் பொய் பேச முயன்றால், உங்கள் தலை போய்விடும்” என்று பீர்பால் மிரட்ட, அஸ்லாம் உண்மையை ஒப்புக்
கொண்டு பொற்காசை பீர்பாலிடம் திருப்பித் தந்தார்.
“சரிதான்! நீங்கள் மதுசூதனிடம் கடன் வாங்கிய 20 முகராக்களையும் இதேபோல் என்னிடம் திருப்பித் தந்துவிடுங்கள்” என்றார் பீர்பால். “நான் மதுசூதனிடம் கடன் வாங்கவே இல்லை” என்று அஸ்லாம் பழைய பல்லவியைப் பாட, இதைக் கேட்டதும் பீர்பால் “அஸ்லாம்! இனியும் பொய் பேசினால், உங்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயம்!” என்று அஸ்லாம் கானை பயமுறுத்த, அவன் உண்மையை ஒப்புக்கொண்டு கடனைத் திருப்பிக் கொடுப்பதாகக் கூறி பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டு, வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி அளித்தான். பீர்பாலின் புத்திசாலித்தனத்தை, அக்பர் வெகுவாகப் பாராட்டினார்.
No comments:
Post a Comment