Friday, February 14, 2025

நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்

 நஞ்சினை தன்னிடம் கொண்ட பாம்போடு ஒருபோதும் பழகக்கூடாது! இதுபோல் நஞ்சினை ஒத்த  தீயஎண்ணம்,தீயசெயல் கொண்டவர்களோடு ஒருநாளும் நெருங்கிப்பழக வேண்டாம்! இதுவே நமக்கான அறிவுரையாகும்.

இந்த நீதியை விளக்கும் ஒரு கதையைப் பார்ப்போமா….

ஒரு காலத்தில் ஜமீன்தார் மாளிகையாக இருந்த  கட்டடம் இன்று இடிந்து சிதிலமாகி கிடக்கிறது. அந்த பாழடைந்த மாளிகையில் எலி, பெருச்சாளி, காட்டுப்பூனை, பூனை,பாம்பு, கீரி,வௌவால், ஆந்தை, கழுகு, போன்றவிலங்குகள் வசிக்கின்றன. அங்கு சுத்தமாக மனித நடமாட்டமே கிடையாது. அந்த இடிந்த மாளிகையிலும் சுற்றி உள்ள இடங்களிலும் மரங்களும் செடி கொடிகளும் புதர்போல மண்டிக்கிடக்கின்றன. மாளிகைக்கு சிறிது தொலைவில் பயன்பாட்டில் இல்லாத  ஒரு குளம் உண்டு. அதில் நிறைய மீன்கள், நண்டுகள், தவளைகள், நீர்ப் பாம்புகள், நீர்க்கோழிகள் என பலதரப்பட்ட உயிரினங்கள் வசித்தன.

பாழடந்த அந்த மாளிகையில் இருக்கும் பல  உயிரினங்களில் ஒரு பூனையும் ஒரு ராஜநாகமும் மிகவும் நட்பாக இருந்தன. ராஜநாகம் என்பதால் மற்ற பாம்புகளும் கூட அதற்கு பயந்து ஔிந்து கொண்டன;காரணம் ராஜநாகம் என்பது மற்ற சிறு பாம்புகளை உணவாகப் பிடித்து சாப்பிட்டுவிடும். ராஜநாகத்துக்கு நண்பன் என்பதால் பூனைக்கு கர்வம் அதிகம். மற்ற விலங்குகள் எல்லாம் அதனோடு சேராமல் விலகியே நிற்கும்.

ராஜநாகத்துடன் நட்பாக இருப்பது என்றைக்கு இருந்தாலும் ஆபத்துதான் என்று கழுகு ஒன்று அந்தப் பூனையிடம் அறிவுறை கூறியது; பூனை அதை காதில் வாங்கவே இல்லை.

தினந்தோறும் நிறைய எலிகளைப் பிடித்துவந்து நண்பன் ராஜநாகத்துக்கு பூனைகொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் குளத்திலிருந்து தவளை, மீன், நீர்ப்பாம்புகளையும் பிடித்துவந்து கொடுக்கும். இதனால் ராஜநாகம் உணவுக்காக தேடி அலையும் சிரமம் இல்லாது போயிற்று; பூனையிடம் யாரும் வம்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ராஜநாகம் எல்லாருக்கும் எச்சரிக்கை செய்தது. இது எல்லாருக்கும் எரிச்சலைக் கொடுத்தது.

ஒருநாள் எலிகள் எல்லாம் ரகசியக் கூட்டம் போட்டன.சில நாட்கள் யாரும் பூனையின் கண்ணில் படவே கூடாது என்று முடிவு செய்தன. குளத்தில் இருந்த மீன், பாம்பு போன்றவை குளத்தின் கரைபக்கமே வராமல் குளத்தின் நடுவிலேயே சில தினங்கள் இருக்க முடிவு செய்தன.

அடுத்தநாள் பூனை எலிகளைத் தேடி அலைந்தது;கிடைக்கவில்லை. குளக்கரைக்கு சென்றால் அங்கேயும் யாரையும் காணவில்லை.பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்கும் பசி வந்து வாட்டியது;பூனைக்கே உணவு கிடைக்காதபோது பாம்புக்கு எங்கிருந்து உணவு கொடுப்பது.

பூனை எலியைப்பிடித்துவரும் என்று பாம்பு காத்திருந்து பசியால் துடித்தது. பூனைமீது அதற்கு கோபமாக வந்தது.

சூரியன் மறைந்து இருள் வந்தவுடன் எங்கிருந்தோ தவறிப்போய் ஒரு எலி வந்தது. ஒரே பாய்ச்சலில் அதைப்பிடித்து பூனை சாப்பிட ஆரம்பித்தது. அந்தநேரம் பார்த்து ராஜநாகம் அங்கு வந்தது. எலியைப்பிடித்து பூனை சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அதற்குக்  கோபம் தலைக்கேறியது.” என்னை பசியில் துடிக்க விட்டு நீ மட்டும் எலியைப் பிடித்து சாப்பிடுகிறாயா”என்று கேட்டபடியே பூனையை ஓங்கி கொத்தி நஞ்சை அதனுடம்பில் பாய்ச்சியது;பூனை துடிதுடித்து இறந்தது.

வாயில் நஞ்சு வைத்திருக்கும் பாம்புடன் பழகக்கூடாது. என்றைக்கிருந்தாலும் அது நம்மை ஆபத்தில் கொண்டுபோய் விடும் என்பதுதான் நமக்கான நீதி.

 (அதைப்போலவே எண்ணத்திலும் செயலிலும் தீமை கொண்டவர்களிடம் பழக்கக்கூடாது; அவர்களால் நமக்கு ஆபத்து நேரும் என்பது நமக்கான அறிவுரையாகவும் கொள்ளலாம்)

No comments:

Followers

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

  ஒரு ஊரில்  ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவ...

Most viewed