புலவர் உலகநாதர் இயற்றிய ‘உலகநீதி’ யில் இரண்டாவது செய்யுளில் உள்ள இரண்டாவது நீதி ‘நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்’ என்பதாகும். இதன் பொருள் : நடவாது என்று தெரிந்த காரியத்தை நிலை நிறுத்தக் கூடாது.இதை விளக்கும் விதமாக அமைந்த சிறுவர்கான கதை நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்.
பெரிய சோலை ஒன்று இருந்தது. அந்த சோலையில் மயில்,குயில்,மைனா,கிளி, காகம், சிட்டுக்குருவி, ஆந்தை,காடை,வான்கோழி, நீர்ப்பறவையான வாத்து,கொக்கு போன்றவையும், அணில் போன்ற சிறு விலங்குகளும் ஒன்றுகூடி வசித்தன.மயில் கார்மேகம் கண்டதும் ஆடத்துவங்கும்.
குயில் இனிய குரலில் கூவும்.மைனாக்கள் ஒன்றுகூடி பலவிதமான ஒலிகளை எழுப்பி இங்குமங்குமாக பறந்து கொண்டிருக்கும். அழகான நிறத்தோடு கிளி பறந்து பறந்து பழங்களையும்,சத்தான கொட்டை வகைகளையும் வலுவான அலகினால் உடைத்து சாப்பிடும்.’காகா’என கரைந்து காகம் தம் இனத்தோடு உணவைப் பகிர்ந்து கொள்ளும். ‘கீச்கீச்’ என்று சப்தமிட்டபடியே தங்கள் கூட்டத்தோடு சிட்டுக்குருவிகள் நாலாபுறமும் பறந்தபடி இருக்கும்.
இரவில் கண்விழித்து ஆந்தைகள் ஒலியெழுப்பியபடி இருக்கும். உயரமான மரப் பொந்துகளில் இருந்து கொண்டு காடைகள் ஒலியெழுப்பி சுற்றிலும் பறந்து கொண்டிருக்கும். வான்கோழி தன் இனத்தோடு மட்டிலும் பெரிய குழுவாக இருக்கும்.
பகலில் தரையில் இரைதேடும் இது, இரவில் பறந்துபோய் மரத்தில் மேல் அமர்ந்து தூங்கும்.
எல்லாரும் மயிலின் அழகையும்,நடனத்தையும் புகழ்வது வான்கோழிக்குப் பொறாமையைக் கொடுக்கும். “எனக்கும்தான் தோகை இருக்கு;ஆனால் என்ன கொஞ்சம் நீளம்தான் குறைவு;என்னாலும் நடனமாட முடியும்” என்று கூறி மயிலை வம்புக்கு இழுக்கும். காகமும்,ஆந்தையும் வான்கோழிக்கு தூபம் போட்டு தூண்டிவிடும்.
ஒருநாள் மாலை நேரம்; மேகம் கருத்து மழைவருவதற்கான குளிர்ந்த காற்று வீசியது. அந்தநேரம்தான் மயில் தன் அழகிய தோகை விரித்து ஆடும் நேரம். மயில் தன் தோகையை விரித்து ஆடத் தொடங்கியது. சோலையில் இருந்த பறவைகளும் சிறு விலங்குகளும் அங்கே குழுமி மகிழ்ந்து சப்தமிட்டு ஆரவாரம் செய்தன. இதைக்கண்ட வான்கோழி தன்னுடைய சிறிய சிறகை விரித்து ஆடத் தொடங்கியது. தன்னால் முடியாது எனத் தெரிந்தும் ஆடுவதற்கு முயன்று மயிலின் முன் அது தோற்று, எல்லாருடைய ஏளனத்துக்கும் ஆளானது.
நடக்காது என்பது நன்கு தெரிந்தும் பொறாமையால் முயன்ற வான்கோழி அவமானப்பட்டு நின்றது. இதைத்தான் செய்யுளின் இந்தவரி உணர்த்துகிறது.
நடக்காது என்று தெரிந்தகாரியத்தை நிலை நிறுத்தக் கூடாது
No comments:
Post a Comment