Friday, July 12, 2024

உன் கண்ணில் நீர் வழிந்தால்!

அந்தக் குடியிருப்பில் ஞாயிறு என்றும் போல் அமைதியாகவே விடிந்ததுசெங்கல்பட்டு  சந்தையின் பின்னால் அமைந்திருந்த அக்குடியிருப்பில் கல்வீடுகள் இல்லை. தொடர்மாடிக் கட்டிடங்களின் எச்சங்களாக அடிமட்ட வாழ்க்கைப் போராளிகள் நாள் நகர்த்தும் சந்து வீடுகள் அவை.

இங்கும் உரிமைப் போர்கள் நிகழ்வதுண்டு.

இப்படி வெடிக்கிறது போர்……..

ஏயா, இப்பிடியா பச்சப்புள்ளைய போட்டு அடிப்பாக. பாரு, வரி வரியா கம்பளி புழு மாதிரி சும்மா வீங்கியில போச்சு. என்ன மனுஷன்யா நீ? புள்ள என்னா குத்தம் செஞ்சிதாம்? ஆசைக்கு ஒரு பொம்மைய தொட்டதுக்கு…..”. அதற்கு மேல் வார்த்தைகள் கண்ணீராய் மாறி பொன்னம்மாளின் உலர்ந்த கன்னங்களை நனைத்தன.

உம் பேத்தி சனியன நீதா கொஞ்சி கொஞ்சி….. ” நாக்கை மடித்து கடித்துக் கொண்டு, ஒரு கோழிக்குஞ்சு தாய் கோழியின் செட்டையின் கீழ் அடைக்கலமான பாவனையில், பொன்னம்மா பாட்டியின் சேலைத் தலைப்புக்கள் ஒளிந்து கொண்டு விக்கி விக்கி அழும் மகள் சாருலதாவை நெருங்கினான் மாரிமுத்து. பொம்மை கிடைக்கவில்லையே என்ற தன் பொசுக்கப்பட்ட அசையை இன்னும் அவள் நினைத்து ஏக்கமாய் பார்ப்பது மாரிக்கு ஒரு பொருட்டாக தெரியவில்லை.

என்னமா அந்த நாயி  கேட்டான்?  “ரோசம் இருந்த உம் புள்ளைக்கு வாங்கி குடுடா சோம்பேறி. எம் புள்ள பாப்புளைய  இனி தொட்டா அவ தோலு உரியும்.”

 எதிர் வீட்டு பிச்சை தன் நாலு வயது மகளை வைதது மாரிக்கு பெரிதாய் படவில்லை. இத்தனைக்கும் அப்படி ஒன்றும் பெரிய தவறு நடந்து விடவில்லையேசாருலதா பிச்சையின் குழந்தையின் பொம்மையை பிடுங்கிக்கொண்டு வந்ததால் வந்த வினை. ஆனால் மகளின் செயலால் பிச்சை முன் தன் மானம் மண்டியிட வேண்டியதாயிற்றே என்ற கசப்பு அவனை உறுத்திற்று. பிச்சைக்கும் தனக்கும் உள்ள நெடுநாள் குரோதப் போட்டியில்  இத் தலைகுனிவு பிச்சைக்கு ஒரு புள்ளியை வழங்கியதாகவே அவனுக்கு பட்டது. இந்த தெருச்சண்டையை வேடிக்கை பார்த்த முகமற்ற மனிதர் முன் தான் சிறுமைப்பட்டதை எண்ணி வெதும்பினான் மாரி.

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சாதாரண வேலிச் சண்டை புரையேறி இரு குடும்பங்களுக்கும் நடுவே ஒரு நிரந்தர விரிசலை ஏற்படுத்தி வைத்தது. கசப்பான முறுகல்களின் சாரம் சிலேற்றில் எழுதப்பட்டு சீட்டுக்கட்டாய் இவர்கள் மனதில் அடுக்கி வைக்கப்பட்டு  உரசல்களின் போது மீண்டும் அவை இவர்கள் கண்களின் முன்  திணிக்கப்படும் போது எழும் வலி  கொடியது. அப்போது பேசப்படும் வார்த்தைகளின் வலிமை எவரையும் சிறுமைப்படுத்தும். தினக்கூலியில் வாழும் சாமானியர்களின் வாழ்வில்  இது ஒன்றும் புதிதல்லவே?

நான்கு வருடத்திற்கு முன் மாரியின் மனைவி மகப்பேற்றில் மரித்த சோகம் அவனை விட்டுப் போகவில்லை. இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாமல் அவள் உயிர் பிரிந்த சோகம் மாரியின் ஆத்மாவையே பிராண்டி எடுத்து எங்கோ தூர எறிந்து விட்டது. அவன் முகத்தில் குடியேறிய கவலைக் கோடுகள்…..அவை வறுமையோ வயதோ வரைந்த வரிகள் அல்ல. மனைவி சாருலதாவின் பிரிவால் அவன் நெஞ்சில் சாத்திய சோகச்சுமையின் வடுக்கள்.

செருப்பை கால் மாற்றி அணிந்து நடப்பவனின்  சங்கடம் மாரிக்கு …..ஒவ்வோரு அடியையும் நினைத்து நிதானித்து வைத்து நகரும் நத்தை வேகம் அவன் வாழ்வில்.

அவனுக்கிருந்த எல்லா சுகங்களையும் மனைவி உறிஞ்சி எடுத்துப் போனாளோ என்ற ஒரு பிரமை.

குழந்தையை கையிலேந்தி நார்ஸ்  ‘என்னா பேரு வைக்கீக?’  எனும் கேள்விக்கு கிழவி முத்திக்கொண்டுஅவ அம்மா பேரயே வச்சுக்க….. மகராசிபச்ச புள்ளய பெத்து கையில கொடுத்துட்டு போயிடிச்சி. அவ போனாலும் பேரு நிக்குமில்ல’. கிழவியின் வாதம்  மாரிக்கும்  சரியாகவேபட்டது.

சாசாருலதாதாதா…’. கிழவி பெயரை ரப்பராக இழுத்து நீட்டி பொக்கை வாய் நிரப்பி குழந்தையின் காதருகே குனிந்து ஒரு இரகசிய மந்திரம் போல் மெதுவாய் ஓதினாள்.

நாட்கள் மாதங்களாகி  மாதங்கள் வருடங்களாகி…… ! நான்கு வருடங்கள் என்னமாய் ஓடிவிட்டன?

மாரிக்கு மனைவி விட்டுச்சென்ற வெற்றிடம்  இன்னும் தரிசு நிலமாகவே பட்டது. ‘சாரு, நீ என் உசிரு புள்ள’  என மனைவியை அணைக்கும் போது இருந்த அந்த நேசத்தின் சூடு இன்றில்லை.

அவளிடம் பகிர்ந்த அந்த அன்பு இன்று தேங்கிக் கிடக்கிறது. அது அவன் நெஞ்சை நிறைத்து தொண்டை குழியை அடைத்து கண்வழி வழிந்து கன்னங்களை நனைப்பதுண்டு. சோகம் என்பதும் செல்ல இடமில்லாத அன்புதானே!

ஆனால் அந்த காதலை அன்பாக உருமாற்றி தன் குழந்தை மீது செலுத்த அவன் மனம் மறுத்தது. ‘ என் சாருவோட உயிர குடிச்ச இந்த சனியன்……’.

கிழவி குழந்தையைசாரு…, சாரு குட்டிஎன் குஞ்சு’  என்று பல பெயர் சொல்லி கொஞ்சினாலும் அவனுக்கு அவள் சாருலதாதான். தன் சாருவுக்கு இருந்த அந்த ஸ்தானத்தில் வேறு ஒருவருக்கும், பெயரளவில் கூடஇடமில்லை

மனைவி சாருவை நினைக்கும் போதெல்லாம் ஐந்து வருடங்களுக்கு முன் அவளை முதலில் சந்திந்த நினைவை அசை போடுவான். மாரி ஒன்றும் பெரிய குமாஸ்தா வேலை செய்து மாசச்சம்பளத்தில் நாட்களை நகர்த்துவபன் அல்ல

செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு முன்னால் உள்ள லக்ஷ்மி விலாசின் கக்கத்தில் பிளாஸ்டிக் துப்பட்டியில் கூரை கட்டி இணைத்து கடை என்ற பெயரில் இயங்கும்டெயிலர் சாப்’. அங்கு ஒரு தையல் மெஷின், துணி அடுக்க கண்ணாடி போட்ட ஒரு அலுமாரி, வாடிக்கையாளர்கள்ஃபிற் ஓன்பார்க்க ஒரு பலகை மூடிய மறைவிடம்…..லக்ஷ்மி விலாசின் முதலாளியின் பரந்த மனதில் மாரிக்கும் ஒரு சின்ன இடம். தையல் மெஷினுக்கு மேல் மினுங்கும் மின்குமிழக்கு மட்டும்தான்கறண்ட் பில்என்ற பெயரில் சிறு வாடகையை முதலாளி மாசா மாசம் வசூலித்துக் கொள்வார். தினமும் வேலை முடிந்ததும் வெளியே கிடக்கும் துணிமணிகளை அலுமாரிக்குள் போட்டு மூடி அதையும் மெஷினையும் மெதுவாய் தள்ளி கடைக்குள் வைத்த பின்  கடையை பெருக்கி சுத்தம் செய்துவரேன் சாமி’  என்று விடை பெற்று வீதியில் இறங்கி செங்கல்பட்டின் சமூகக்கும்பலுக்குள் கலந்து மறைவான்.

Advertisements

REPORT THIS AD

அவன் இவற்றை விரைவாக செய்து கடையை விட்டு வீதிக்கு வந்தாக வேண்டும். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ‘மாரி, என்னா அவசரம்…. உனக்கென்ன பொண்டாட்டியா குடும்பமா? சும்மா ஒரு ஐஞ்சு நிமிஷம் இருந்துண்ணு போறது…. ” என்று முதலாளி  பேச்சுத்துணைக்கு பிடித்துக் கொள்வார்மாரிக்குத் தெரியும் அந்த ஐந்து நிமிடங்கள் ஐம்பது நிமிடங்களாய் நீளும் என்று. முதலாளி ஒரு நல்ல கதை சொல்லி. நல்ல  வாசிப்பனுபவம் உள்ளவர். மாரி எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படியை  மறந்தவன். ஆனால் முதலாளி தன் கல்லாப்பெட்டியில்  இருந்தவாறு படிக்கும் இலக்கிய நயமுள்ள புத்தகங்களை பார்த்திருக்கிறான். “மாரி நீ புதுமைப்பித்தன் படிக்கணும்டோய். என்னா துணிவா மனுஷன் எழுதிவச்சான்? அது முப்பதுகளில எழுதுதினது கண்டியோ…. என்னா எழுத்து…. என்னா துணிவு”  என சிலாகித்துக் கொள்வார்.

மாரியின் காதுகள் முதலாளியின் வார்த்தைகளின் பாதியை கிரகித்தாலும்  கண்கள் கடைச்சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்திலும் அதன் இரு மருங்கிலும் மாட்டியிருக்கும் புதுமைப்பித்தன், பாரதி, ஜெயகாந்தன் படங்களிலும் பதிந்திருக்கும்தன் இலக்கிய நாட்டத்தை ஊருக்குச் சொல்லவே  அவரின் இந்த சோடனை. ஆளுமை, படைப்பாளி, இலக்கிய சந்திப்புவாசிப்பனுபவம் போன்ற சொற்களை தம் பேச்சில் ஆங்காங்கே தூவி தானும் ஒரு இலக்கியவாதி என்ற காட்டிக் கொள்வார்.

இந்தா இந்த வடைய கடிச்சுக்கோ”  என தட்டை தள்ளி  அவர் கல்லாப்பெட்டிக்கு அருகில் இருந்த கதிரையில் அவனை அமர்த்தி இறுதியாய் படித்த சிறுகதையொன்றை சொல்லத் தொடங்குவார். அவருக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. கடையின் மேல் மாடியில் குடியிருப்பெனில் அது பற்றி கவலை ஏனாம்?

மாரிக்கு சாதகமானது ஒன்று இல்லாமல் இல்லை. முதலாளி நாவல்கள் படிப்பதில்லை…. அவர் வாசிப்பு சிறுகதைகளுடன்  சரி. எனவே முதலாளியின்கதை கேட்போம் வாரீர்அங்கங்கள் ஒரு மணி நேரத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

பொன்னகரத்தின்ட முடிவில  பித்தன்  என்னமா கேட்டான் கண்டியோ?…. என்னா புரட்சி!…’என்னமோ கற்பு கற்புணு கதைக்கிறீங்கஇதுதான்யா பொன்னகரம்’  அப்பிடீனு போட்டானே ஒரு போடு. இப்போ இப்படி எழுதிப் பார்க்கட்டும்கொளுத்திப்போடுவானுக!” என விமர்சனத்தை முடிப்பார்.

ஜெயகாந்தனும் கொஞ்சம் துணிவாத்தான்  எழுதிவச்சான். ‘புது செருப்பு கடிக்குமுணு’  ஒரு கத…. கல்யாணமாகி முத இரவில  மாப்பிள கட்டின பொண்டாட்டிய விட்டுணு வேற பொண்ண தேடி போனானாஅந்த பொண்ணு கால் விரல்ல காயத்துக்கு  எண்ண தேச்சிண்டு சொல்லறா… “புது செருப்பிலஅதான் கால கடிச்சிரிச்சி”. மாப்பிளைக்கு மூளையில செருப்பால அடிச்சாப்பல புத்தி வந்திடிச்சா…. சைக்கிளல ஏறி ஊட்டுக்கு போறான்…. அதான்யா கத……. கத பேரிலேயே கத  முழுசா அடங்கிரிச்சில்ல?”  என்று கேட்டு விட்டு பதிலுக்காய் காத்திருக்காமல்  “மாரி, இதெல்லாம் படிச்சிப்பாத்து  அனுபவிக்கணும் மாரிஎன்பார்.

சும்மா எழுதிக்குவிச்சா எல்லரும் படிப்பானுகணு  நினைக்க வேணாம் மாரி. இலங்கையில மல்லிக ஜீவாணு எழுத்தாளரு….. புத்தகத்த அச்சடிச்சு தோள்ல சுமந்து இலக்கியம் வளர்த்தாரு கண்டியோ?”

முதலாளி மறைந்த  படைப்பாளிகளை மட்டுமல்ல சமகாலத்தில் வாழும் எழுத்தாளர்களையும் மாரிக்கு அறிமுகப்படுத்த தவறுவதில்லை.

மாரி, நவீன இலக்கியமெங்கிறது மரித்துப் போகல…… இப்போ ஜெயமோகன்னு ஒருத்தர் நல்லா எழுதுறாரு. அவரோடகுருவிஎங்கிற கதயில் மாடன் பிள்ளைனு  ஒரு எலட்றீசன். கத கடைசீல ஒரு தூக்கணாங் குருவி ஒயரில் பின்னின கூட்ட நெஞ்கோட அணைச்சிணு  கதறி அழுது ஒரு புது மனுஷனா மாறி….ஒரு சடப்பொருளும் மனுஷாள மாத்தலாமுணு தெரியுமோ?’  என கேள்வியிலேயே கதை முடிப்பார்.

மாரியை வாசிப்பின் பக்கம் சாய்த்துவிட  அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தாலும் அவனும் ஒரு நாள் வாசகனாவான் என்ற நம்பிக்கை அவருள் இருந்தது.

நாள் முழுவதும் குனிந்த தலை நிமிராமல் முயலைத் துரத்தும் வேட்டை நாய் போல் துணி மீது  நூல்கோலம் போட்டு ஓடும் ஊசியின் நடனத்தை கண்ணயராமல் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு வாசிப்பில் எப்படித்தான் காதல் வரும்? ஒரு டெயிலரின் தலைகுனிவில் கைகோர்த்து வரும் கழுத்து வலியையும் கண்ணயர்வையும் புரிந்தவரில்லை. ஆனால் வேலை முடிந்ததும் நடைபெறும் முதலாளியுடனான இலக்கியப் பகிர்வு அவனுக்கு ஒரு கட்டாய விடிவாகவே பட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன் தீபாவளிக்கு ஒரு பிளவுஸ் தைப்பதற்காய் சாருலதா மாரியின் கடைக்கு வந்ததை கல்லாப் பெட்டியில் இருந்தவாறே  முதலாளி கவனித்திருந்தார். பரந்த நெற்றியின் நடுவில் ஒரு சிறு கரும்பொட்டு, துரு துரு என எதையோ தேடும் கண்கள்ஒற்றைப்பின்னல்  கட்டிய சடையில் சொருகிய மல்லிகைச் சரம். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் சந்தண நிறம்.

 டெயிலர்ண்ணா, துணி எடுக்க லேட்டாகிடுது. தீபாவளியும் வந்திற்றுஇத முடிச்சித்தர ஏலுமா?”

தலையை நிமிர்த்தி பார்த்த மாரிக்கு அவள் கண்களில் இருந்த அந்த தவிப்பை உணர முடிந்ததது. கீழே இழுத்துக் கொண்ட அவள் உதடுகளில் இருந்த தாபம் அவனுக்குப் பிடித்திருந்தது.

டெயிலரண்ணா இல்ல….. மாரி…. மாரி”  என கூறி தம்மிடையே இருந்த உறவை ஒரு புன்முறுவலுடன் தட்டி நிமிர்த்திக்கொண்டான்.

அதை புரிந்தது போல் தலையை இருபுறமும் அசைத்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்தாள் சாருலதா.

அவர்கள் உறவின் முதல் அங்கீகர முத்திரை அது.

முதல் சந்திப்பில்…. அந்தக் கணத்தில்…. ஒரு தீப்பொறிபோல் தோன்றி மறையும் அந்த மகிழ்ச்சிக் கண்ணிவெடி அவன்அவள் மட்டுமே புரிந்து அனுபவிக்கும் ஒன்று. அக்கணம் பற்றி அவர்கள் இன்னும் எத்தனையோ முறை நனவிடை தோய்ந்தாலும் ஒரு மத்தாப்பு, ஒளி எச்சம் உதிர்த்து வான் ஏறி வெடித்து விரிந்து ஒரு அரக்கனின் குடை போல் வண்ணத்தூவானத்தை  வானில் பரப்பி  மறையும் அந்த மகிழ்ச்சிப் பிரவகம் ஒரு முறைதான் எவர் வாழ்விலும் தோன்றி மறையும்! அந்த மகா மத்தாப்புக்காய் ஏங்கியவர் பலர். சிலர் வாழ்வில் தீக்குச்சி தொடாத திரியாய் அது மறைந்து போவதுண்டு.

தீபாவளியைத்  தாண்டியும் மாரியைப் பார்க்க சாருலதா வருவதை முதலாளியின் கழுகுக்கண்கள்  கவனிக்கத் தவறவில்லை.

ஒவ்வொரு சந்திப்பிலும் சாருலதாவின் கைகளில் இருக்கும் புத்தகங்களையும் அவர் பார்த்திருந்தார்.

என்னா மாரி, அந்த பொண்ணு தினம் வர்ராப் போல?…. ஏதுண்ணா  நமக்கிட்ட சொல்லலாமில்லையோ?” என தூண்டிலைப் போட்டார்.

இல்லீங்க….. சும்மா ….” ஆணுக்குரிய அரை வெட்கத்துடன் ஒரு அசட்டுச் சிரிப்பை  உதிர்த்துவைத்தான் மாரி.

முதலாளி அடுத்த கேள்விக்கணையை தொடுக்கும் முன்னரே   “சாரு நாவல் எல்லாம் படிக்குமுங்க….. பார்த்தசாரதி, அகிலன் … “

! சாருவா பேரு?….. நாவல் படிக்கற பொண்ணுணா உனக்கு கத சொல்ல ஆள் கிடைக்கிரிச்சிணு  சொல்லு”  என்று ஒரு கண் சிமிட்டலுடன் அவர்கள் உறவை அங்கீகரித்தார் அவர்.

நாவல் படிப்பதற்கு  நேரத்தின் அர்ப்பணிப்பு தேவை என்பது அவர் வாதம். நாவலின் கதாபாத்திரங்களுடன் ஒன்றித்து ஒரு சகபயணியாய் அவர்களுடன் பயணித்து  அலைக்கழிந்து அவர்களின் சுக துக்கங்களில் மூழ்கி எழுந்து ஒரு உணர்ச்சிக்குழம்பில் குளித்து வரும் அனுபவம் உன்னதமானது என்பார்.

ஒரு வாசிப்பனுபவம்  உள்ள ஒரு துணை மாரிக்கு கிடைத்ததில் முதலாளிக்கு ஒரு பெருமைமனித நேயத்தை அளவிடும் அளவுகோல் அவருக்கு வாசிப்பு மட்டுமே. படிப்பும் பட்டங்களும் அவருக்கு கடைசி வாங்கு வாசிகள்.

மணமான புதிதில் மாரி கடையை மூடிவிட்டு முதலாளியின்  ‘கதை நேரத்தை’  குறுக்கிக் கொண்டு    செங்கல்பட்டு  சந்தையின் பின்னால் அமைந்திருந்த   சந்தில் நுழைந்து மறைவான். போகும் வழியில் சாருவிற்காய் ஒரு மல்லிகைச்சரத்தை வாங்கத் தவறுவதில்லை.  “இந்தா புள்ள….. வச்சுக்கஎன அவன் கையில் அதைத் திணித்து அவள் அதை லாவகமாய் கூந்தலில் சொருகுவதை பார்த்து  “ஆயிரங் கண் போதாது செல்லக் கிளியே……”  என ஒரு நாடகக்காரனின் பாணியுடன் கைகளை உயர்த்திப் பாடி அவளை கட்டிக் கொள்வான். அவன் பிடிக்குள் சாரு சங்கமமாவாள்.

இவ்வகை குட்டிக்குறும்புகள்தானே இவர்களைப் போன்ற சாமானியர்கள் சிமிழில் அடைத்துவைத்து அவ்வப்போது தூவிக்கொள்ளும்  இன்பப்பொடி

 ஏம்பாஇண்ணைக்கி என்னா தேதிணு தெரியுமில? இண்ணையோட உம் மகளுக்கு ஐஞ்சு வயசு  ஆயிடிச்சுஇண்ணைக்கு ஞாயிற்று கிழம…. உனக்கும் கட மூடி…. கொழந்தைய எங்காச்சும் கூட்டிண்ணு  போறது….. பாவம்பச்ச புள்ளபொறந்த நாள் இல்ல?”  எனும் கேள்வி நிரம்பிய தன் வேண்டுதலை மாரியிடம் நாசுக்காக சொல்லி அவன் பதிலிற்காய்  காத்து நின்றாள் கிழவி. தன் மகன் தன் வேண்டுதலை நிராகரித்துவிடக் கூடாதே என்ற  தாபத்தை அவள் கண்கள் சொல்லிற்று.

எங்கா போறதாம்?” என்ற மாரியின் பதில் கேள்வி பொன்னம்மாவின் கண்களில் ஒரு நம்பிக்கை கீற்றை விதைத்தது.

அவதான் ஆன, சிங்கம், புலி எல்லாம் பாக்கணும்ணு ஒரே சொல்றாமிருகக்காட்சி காட்ட கூட்டிப் போறது?”

கிழவியின் பதில் மாரிக்கு சரியாகவே பட்டது.

வாழ்வின் மடிப்புகளுக்குள் ஒளிந்துள்ள அந்த ஈரத்தின் வலிமை  என்றும் ஒரு புதிர்தான்அது அவனை ஆட்கொண்டு  அவனின் மூடப்பட்ட இதயத்தின் கதவுகளை சாவியின்றியே அகலத் திறந்து குடிபுகுந்ததை  அவன் அப்போது உணரவில்லை!

கிழவிக்கு எல்லை மீறிய மகிழ்ச்சி.

சாரு…. சாரு குட்டி…..அப்பாவோட சிங்கம் ஆன எல்லாம் பாக்க போயிற்று வாம்மா…..

…….. புதுச்சட்ட போட்டு தல சீவி …. பொறந்த நாளில்ல…. பொறந்த நாள்”  என அவசரமாய் ஆயுத்தங்களை செய்யத்  தொடங்கினாள்தன் மகன் மனம் மாறும் முன் அவர்களை பஸ் ஏற்றி அனுப்பிவிட வேண்டுமே என்ற அவசரம் அவளுக்கு.

மாரியும் மகளும் செங்கல்பட்டு  பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து செல்வதை வீட்டு வாசவில் நின்று பர்த்துபுள்ள கைய புடிச்சி  கொண்டுபோப்பா’  என நாக்கு நுனியில் வந்த வார்த்தைகளை  வெளியே விடாமல் விழுங்கி சீரணித்துக்கொண்டாள்.

சென்னை பஸ் ஏறி வண்டலூரில் இறங்கி  அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவினுள்  நுழையும்வரை மாரி  அமைதியாகவே எண்ணங்களில் லயித்தவனாய்  ஒரு நடைபிணம் போல் நிழல் நகர்த்தினான். அவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாருலதா ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர்ந்தாள்

இன்னும் இரு நாட்களில் அவன் மனைவி குழந்தை சாருலதாவைப் பெற்றெடுத்து அவன் கையில் கொடுத்து விட்டுப் பிரிந்த நாளின்  ஐந்து வருட பூர்த்தி. என்னமாய் இருந்திருக்க வேண்டிய வாழ்க்கை இப்படியானதே  எனும் வலி அவனை சுட்டுப்பொசுக்கியது.

ஒரு பொடிநடையாய் இருவரும் விலங்கியல் பூங்காவுக்குள் நுழைந்தனர்.

குழந்தை சாருலதா மிருகங்களின் விசித்திர தோற்றங்களை  தன்னை மறந்து லயித்து முக பாவனைகள் செய்து ஒரு இன்பக் கூத்தாடலில் மூழ்கியிருந்தாள்.

அவளின் லயிப்பில் கலந்து கொள்ளாமல் ஒரு சகபயணியைப் போல் அவன் அவளுடன் நடந்து சிம்பன்சி வகை மனிதக்குரங்குகள் இருக்கும்  காப்பகத்தின் முன் வந்து நின்றான்.

அரைவட்டமாய் ஒரு தீவு போல் சீமேந்து அரை சுவர் எழுப்பிய களம். அதன் எல்லையை சுற்றி உள்ள இடைவெளியில் தேங்கிநிற்கும்  பாசிப்பச்சை கலந்த நீர் அகழி. அந்த வானரங்கள் பார்வையாளர்களை நெருங்காமல்  இருப்பதற்காகவே  இந்த ஏற்பாடு. தீவின் நடுவில் ஒரு பெரிய மரம். அதன் கீழ் அவை விளையாடிக்கழிக்க கூரை போட்ட கம்பி மேடைகள், கயிற்று ஊஞ்சல் மற்றும் மரக்கட்டை இருக்கைகள். அவைகளின் குடியிருப்பு அந்த அகழியில்  அக்கரையில் இருந்த  சீமேந்து பூசிய போலிக் குகைகள்தீவில் இருந்து அகழியை கடந்து குகைக்குள் செல்ல ஒரு மரக்கட்டைப்பாலம். இதுவே இவர்கள் உலகம்.

மூன்று குரங்குகள் ஒரு குடும்பமாக சோம்பலுடன்இங்கு பார்ப்பதற்கு ஒன்றுமில்லைஎன்ற பாவனையில் அரைத்தூக்கத்தில் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தன.

சாருலதா கண்களை அகலத்திறந்து அவற்றின் ஒவ்வொரு அங்கஅசைவையும்  கிரகித்துக்கொண்டிருந்தாள். அங்கிருந்த பெயர் பலகையில் அப்பா, அம்மா குரங்குகளின் பெயர்கள் கொம்பே, கோகோ எனவும் குட்டிக் குரங்கு பெயர் சுட்டி எனவும் எழுதி மாட்டியிருந்தார்கள்.

அவற்றிற்கான மதிய உணவு பகிரும் நேரமது. திடீரென வளர்ந்த இரு விலங்குகளும் உஷாராகி எழுந்து நின்று கைகளை நெஞ்சிலடித்து  உதடுகளை சுருக்கி தம் பழுப்பு நிற பற்களைக் காட்டி ஆட்டம் போட்டன. தமக்கு படைக்கப்பட இருக்கும் பழங்களின் நறுமணம்  நாசியில் நுழைந்து மேடையேற்றிய ஆனந்த நர்த்தனம் அது. சுட்டிக்கு இந்த சடங்கு புரிந்ததாய் தெரியவில்லை. குகையின் கதவுகள் திறக்கப்பட கொம்பேயும் கோகோவும் ஒரு பாய்ச்சலில் உள்ளே நுழைந்து மறைந்தன. அந்த கணத்தில் இணைப்புப் பாலத்தில்  நின்று ஒரு குட்டிக்கறணமடித்து  தன் குதூகலத்தை காண்பித்த சுட்டி கால்தவறி கீழே இருந்த அகழியில் தொபீர் என விழுந்து நீரில் மறைந்ததுஅப்போது எழுந்த அந்த சப்தம் கோகோவின் காதுகளுக்கு எட்டியிருக்க வேண்டும்…. தொப்பிள்கொடி உறவல்லவாகுகை வாசலில் தோன்றி சுட்டி எங்குதான் போயிருக்கும் என கண்களால் அளவெடுத்து பின் கீழே குனிந்து  நீரில் தத்தளிக்கும் தன் செல்வத்தை காப்பாற்றும் நோக்குடன் மேலிருந்து அகழிக்குள் ஒரு நீண்ட கீச்சல் ஒலியெளிப்பியபடி பாய்ந்து நீருள் மூழ்கி மறைந்தது.

பார்வையாளர் எல்லோரும் தம் கண்முன் விரியும் அந்த பாசம் பிணைப்பின் புதிய பரிமாணத்தின் சாட்சிகளாய் வாயடைத்து நின்றனர்.

சிலர்சாப்பாடுண்ணா பிள்ள என்ன குட்டி என்ன?’  என சமூக நீதி பேசினர்.

எங்கும் அமைதி!

அந்த சில வினாடிகள் மணிகளாக தோன்றிற்று!

அகழி நீரில் ஒரு அலைவட்டம்!

மெதுவாய் தெப்பமாய் நனைந்த கோகோவின்  தலை  முதலில் தோன்றிற்று.

கோகோவின் கைகளில் தன்னை முழுவதுமாய் ஒப்புக்கொடுத்துவிட்டதுபோல்  சுட்டியின் ஈர உடல் ஒரு பந்தாக சுருண்டு கிடந்தது, ஒரு பொக்கிஷத்தை கைகளில் சுமக்கும் கவனத்துடன் மெதுவாக கோகோ அகழியை விட்டு வெளியேறி  அந்த புத்தரையில் தன் செல்வத்தைக் கிடத்தி எழுந்து நின்று நெஞ்சிலடித்து ஒரு கர்ஜனையை எழுப்பிற்று.

கைகளில் பப்பாளிப் பழங்களை நெஞ்சுடன் அணைத்தவாறு குகை வாசலில் தோன்றிய கொம்பேவின் கண்களுக்கு புல்தரையில் கிடக்கும் தன் செல்வத்தின் ஈர உடலையும்  அதன் அருகில் தெப்பமாய் நனைந்த மேனியுடன் எக்காளமிடும் தன் துணையின்  இயலாமையையும் பார்த்து நிலமையை புரிந்து கொண்டது.

ஒரே பாய்ச்சலில்  புல்தரைக்கு வந்துஉவ்உவ்உவ்உவ்’  என ஒலியெமுப்பி ஒரு தந்தையின் கரிசனையுடன் தன் செல்வத்தை ஒரு பஞ்சுமிட்டாயை சுமக்கும்  மென்மையுடன் தூக்கி தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டது. அந்த அன்பின் சூடு அந்த காப்பக வேலியை தாண்டி பல இதயங்களை  தொட்டுக்சென்றது.

குட்டி தப்பிடிச்சி…..  .. அங்க பாருங்க… … அதோட கால் ஆடறத “.

மாரி தன் கண் முன் விரியும் அந்த காட்சியின் ஆழத்தை புரிந்து கொண்டான். தன் குட்டி பிழைத்துவிட்டது எனும் பெருமிதம் நிறைந்த கண்களுடன்  கூட்டத்தை நிமிர்ந்து பார்த்த கொம்பேயின் கண்களின் கரைகளில் திரண்டு நின்ற கண்ணீர் மாரியின் நெஞ்சை நனைத்தது. ஒரு மிருகத்திடம் இருந்த அந்த பாசப்பிணைப்பு அவன் வாழ்வில் எங்கே போனதாம்?  சீ, ஒரு பிராணியிடம் இருப்பது தன்னிடம் இல்லையே என்ற குற்ற உணர்வு அவனை கடைந்தெடுத்தது.

மனைவி சாரு  ஒரு முறை அவன் மார்பில் சாய்ந்து  வாசித்த  “உன் கண்ணில் நீர் வழிந்தால்…..”   கவிதை வரிகள் அவன் எண்ணத்தில் பளிச்சிட்டு மறைந்தன.

தன்னை கூட்டிலடைத்து மிருகங்கள் வேடிக்கை பார்ப்பதாய் அவனுக்கு தோன்றிற்று.

முதலாளி  சொன்னகுருவி’  கதையின் நாயகன் மாடன் பிள்ளை ஒயரால் பின்னிய தூக்கணாம் குருவிக்கூட்டின் நுட்பத்தைப் பார்த்து மனமுடைந்து அழுத புள்ளிக்கு தன்னை இந்த விலங்குகள் என்னமாய் இழுத்து வந்து உட்காரவைத்துவிட்டன என எண்ணி வெதும்பினான் மாரி.

உணர்ச்சி மேலீட்டால், நடுங்கும் தன் கைகளால், குனிந்து சாருலதாவின்  தோள்களை பற்றினான் மாரி.

அவன் பிடியில் இருந்த இறுக்கம் சாருவிற்கு இதமாகவே இருந்தது. பாட்டி ஒரு முறை சொன்ன கதையில் வரும் மலைப்பாம்பின் பிடியின் இறுக்கம் அல்ல அது என அவள் உள்உணர்வுகள் சொல்லிற்று. இந்தத் தொடுகைக்காக அவள் பிஞ்சு மனது எத்தனை ஆண்டுகள்தான் காத்திருந்தது?

ஒரு அன்பின் மீட்டெடுதல் அங்கு அமைதியாய், ஒரு ஊமைப்படம் போல், அப்போது  ஓடி முடிந்ததுஅவர்களிடையே இருந்த ஒரு பெரு இடைவெளியில், வெற்றிடத்தில், அன்பு எனும் ஆறு ஓடி நிறைந்து பரிபூரணமானதுஓடிய ஆறு அவன் கண்வழி வழிந்து கன்னங்களை நனைத்து துளியாய் திரண்டு மண்ணில் வீழ்ந்து மாண்டது.

தூரத்து பட்சிகளின் கூவல்களைத் தவிர எங்கும் அமைதி. வார்த்தைகளை விரையப்படுத்தாத அந்த கணங்களை மெளனம் ஆட்கொண்டது. வரிசைகட்டி நின்ற வார்த்தைகள் மாரியின் தொண்டைக்குழியில் பாசம் எனும் குண்டடிபட்டு வீழ்ந்து மாண்டன!

வாழ்க்கையில் தவறவிட்ட தருணங்களை மீட்டெடுக்கும் வேட்கையில் மாரி குனிந்து சாகுலதாவை தூக்கியெடுத்து  அணைத்து  “நீ என் உசிரம்மா….ஊட்டுக்கு போவமா சாரு?”  என நா தழுதழுக்க கொஞ்சலாக கேட்டான்.

தன்னைசாருஎன முதல் முறையாக அப்பா அழைத்ததை அவள்  பரிபூரணமாக ஆமோதிப்பதைப்போல்  தலையை பலமாக ஆட்டி அங்கீகரித்தாள்.

அவர்களின் துயரக்காவியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அந்த தருணத்தை கொண்டாடுவது போல் எங்கோ  ஒரு யானை ஒரு நீண்ட மூச்சை உள்ளிழுத்து அதை பிளிறலாக்கி  வெளிக்கொணர்ந்து பின் மௌனித்தது!

(முற்றும்)

 


No comments:

Followers

ராஜ வாழ்க்கையால் சோம்பேறியான இளவரசன்.. இப்படி ஒரு மாற்றமா?

  நாட்டின் ராஜாவிற்கு ஒரு மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக ஒரு இளவரசனை எப்படி பார்த்து கொள்வர்களோ அதே போல பார்த்து கொண்டார்கள். இளவரசன்...

Most viewed