அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, “பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்” என்றான்.
அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன!
ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, “முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?” என்று சீறினார்.
அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, “உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!” என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் “அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?” என்று கேட்டான்.
“இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!” என்றான் அலி. “தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?” என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான்.
சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், “வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!” என்றான்.
“என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!” என்றான் அலி!
“இன்று ஒருநாள் மட்டும் செய்” என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான்.
மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான்.
சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, “ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?” என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி “இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!” என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது.
கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, “நீ இன்னும் சாகவில்லையா?” என்று கேட்டார்.
“இல்லை, பிரபு!” என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, “வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!” என்றான். “உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?” என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், “பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?” என்று அக்பர் கேட்டார்.
“பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்” என்றான் பீர்பல்.
“அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?” என்று அக்பர் கேட்க, “அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கேட்டான் பீர்பல்.
அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், “நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்” என்றவர் அலியைப் பார்த்து, “பிழைத்துப் போ” என்றார்.
No comments:
Post a Comment