ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.
இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம்.
ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது.
குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன.
தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று.
நீதி :
சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
.
No comments:
Post a Comment